Saturday, May 05, 2012

இறை வழிபாட்டு முறை

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.




1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு

அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.

மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.



2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு;

அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு

தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்

திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.



3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

மலர்களால் பூஜிப்பது ஏன்?


அன்றலர்ந்த மலர்களால் சுவாமியை பூஜிக்கும்போது சுவாமிகளின் மனம் குளிர்கிறது. இதனால், அகம் மகிழும் சுவாமிகள் நமக்கு வேண்டிய வரங்கள் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிகின்றனர். எனவேதான், சுவாமி பூஜையின்போது பிற பூஜைப் பொருட்களை விட மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு, பூஜைக்கு சிறந்த சில மலர்களில் வாசம் செய்யும் சுவாமிகள்.



தாமரை - சிவன்

கொக்கிரகம் - திருமால்

அலரி - பிரம்மன்

வில்வம்- லட்சுமி

நீலோத்பலம்- உமாதேவி

கோங்கம் - சரஸ்வதி

அருகம்மலர்- விநாயகர்

செண்பகமலர்- சுப்பிரமணியர்

நந்தியாவட்டை- நந்தி

மதுமத்தை - குபேரன்

எருக்கம் - சூரியன்

வன்னி - அக்னி





பிரகாரம் எதற்கு?

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி. ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.





தேங்காய் உடைப்பது ஏன்?

இறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது. தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந்தபேறைக் குறிக்கிறது. இந்த நீரை சூழ்ந்திருக்கும் ஓடு, அதனை உணர முடியாமல் நம்மை சுற்றியிருக்கும் மாயையான உலகைக்குறிக்கிறது. தேங்காயை இறைவனின் திருச்சன்னதியில் உடைப்பதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள மாயையை தகர்த்தெறிந்து பரமானந்தமான பேரமுதை அடையும் செயலை உணர்த்துகிறது. இதேபோல், இச்செயலுக்கு மற்றோர் அர்த்தமும் கூறப்படுகிறது. தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும் போது அதிலுள்ள நீர் வடிந்து வெளியேறுகிறது. அதுபோல, இறைவனின் திருப்பாதம் பணியும் நாம் நமது மனதில் உள்ள ஆசைகளை வடித்து வெளியேற்றி, உள்ளத்தை தூய்மைப்படுத்தி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும்.





அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.



ஆறுவகை உபசாரங்கள்



இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.



1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.

2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.

3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.

5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.

6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.

No comments: