Wednesday, June 25, 2014

யோகா: காலங்களைக் கடந்த அறிவியல்


யோகா, காலங்களைக் கடந்து நின்று நமது உடலுக்கு நல்லது செய்யும் ஒரு அறிவியல் முறை. ஆனால், யோகா அதற்குரிய உண்மையான பொருளுடன்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஒட்டுமொத்தமான புரிதலின்மை தான், நாட்டின் வாழ்வுக்கும் நலவாழ்வுக்கும் இன்றைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. "நாளையைப் பற்றிய சிந்தனை அவசியமற்றது. இன்றைய தினத்தை இழக்க வைப்பது" எனும் வணிகக் கண்ணிச் சித்தாந்தம் ஆழமாக வேரூன்றிவரும் காலம் இது. நம்மில் பெருவாரியானோர் கட்டாயத்தினாலோ அல்லது வேறு வழியின்றியோ அல்லது போகிறபோக்கில் கலந்துகொள்ளும் மனோபாவத்திலோ இக்கண்ணி சித்தாந்தத்தில் கணிசமாய்ச் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம் மரபும் பாரம்பரியமும் இந்த வாழ்க்கை முறையை எந்தக் காலகட்டத்திலும் எந்த வடிவிலும் கற்றுத் தந்ததில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் சரி, நோய் முதல் நாடி நோயைத் தணிக்க எத்தனித்ததும் சரி, முழுமை யாய் ஒட்டுமொத்தப் புரிதலின் விளைவால் ஏற்பட்டவைதான். பாரம்பரியத்தை “அடிப்படை வாதம்; மடமையின் இன்னொரு வடிவம்” எனப் பேசித் திரிவோருக்கு, நெடுநாளாய் உலகில் நிலவிவந்த மடமையை, அடிப்படைவாதத்தைத் தகர்த்த முதல் அறிவியல் நம் பாரம்பரியம்தான் என்பது தெரியாது.

நோய்க்குக் காரணம்

“எல்லா நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உனது கன்மமும், பிறப்பும், பிசாசும், சாபங்களும்தான் காரணம்” என உலகின் பெருவாரியான கூட்டங்கள் வெகுகாலம் சொல்லி ஆதிக்கம் செய்துகொண்டிருந்தபோது, “உன் உடல்நலத்துக்கு, உன் உடலில் நடைபெறும் உணவால், செயலால், எண்ணத்தால், சூழலால் நீ ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் காரணம்; பிறப்போ/பிசாசோ காரணமில்லை” என உரக்கச் சொன்ன கூட்டம்தான் ஓகத்தை (யோகாவை) படைத்த நம் மூத்த குடியினர். “அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போதே” எனப் பிரபஞ்சத்தை நம் உடலுடன் நுட்பமாய்ப் பொருத்திப் பார்த்த முதல் அறிவியல் அவர்களுடையது. சிக்மண்ட் பிராய்டுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நரம்பு-உளவியல் அறிவியலையும், உடல்-மன ஒருங்கிணைப்பின் பிடிமானத்தையும் உற்றுநோக்கியவர்கள் அவர்கள்.

இன்றைக்கு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞானம் யோகா. சில வளர்ந்த நாடுகளில் யோகா பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளுக்கு இன்சூரன்ஸ் வசதி கிடையாது என்கிற அளவுக்கு யோகாவின் வீச்சு பரந்துபட்டது. யோகா, ஆசனம், பிராணாயாமம், மூளையின் ஆழ்மன ஓட்ட வேகத்தை எப்படி அமைதிப்படுத்தி (இதை ஆல்ஃபா நிலை என்கிறார்கள்) மூளையின் செயல்திறனை இன்னும் மேம்படுத்துகிறது என பல நவீன ஆய்வுகளை நடத்தி, உலகே ஏற்கும் தரவுகளைக் கொணர்ந்திருக்கிறார்கள்.

ஆல்ஃபா நிலை

மொஸார்ட் இசைப்பதும், வாட்சன் கிரிக் DNA யின் இரட்டை திருகுகுழல் (Double helix) வடிவத்தைக் கண்டறிந்ததும், ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும் (Theory of Relativity) ராமானுஜனின் எண்கணித சூத்திரங்களும் இந்த ஆல்ஃபா நிலையில்தான் கண்டறியப்பட்டது எனப் பல யோகா ஆசிரியர்கள் கூறுவர். தியானம், பிராணாயாமத்தின் மூலம் ஒருவரால் இந்த ஆல்ஃபா அமைதி நிலையை அடைய முடியும் என்று இன்றைய நவீன அறிவியல் தரவுகள் மூலம் நிரூபிக்கின்றனர், இன்றைய நவீன யோகிகள்.

யோக நித்திரையின் நவீன வடிவமான IRT/QRT/DRT- Instant/Quick/Deep Relaxation Techniques எப்படித் தூக்கமின்மையை (Rapid Eye Movement (REM) Sleep) இயல்பாய் களைந்து நல்லுடலுக்குத் தேவையான, இரவில் மட்டுமே சுரக்கும் மெலடோனினைச் சுரக்க வைக்கிறது என்றும் இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழக வழிகாட்டுதலில் நவீன யோகிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இன்னும், இன்றைய துரித வாழ்வின் மிக முக்கிய நலச் சவாலான சர்க்கரை நோயை அர்த்த மகராசனமும் தனுராசனமும் எப்படி கட்டுக்குள் வைக்கிறது, ரத்தக் கொதிப்புக்குச் சீதளி பிராணாயாமமும் விருட்ச/கருடாசனங்களும் எப்படிப் பயனளிக்கின்றன, மாரடைப்பை வரவழைக்கும் இதய நாளத்தின் கொழுப்படைப்பு மூச்சுப் பயிற்சியால் எப்படிச் சீராகிறது, நாட்பட்ட நுரையீரல் நோய்க்கும் ஆஸ்துமாவுக்கும் பிராணாயாமம் எப்படி நுரையீரலின் Forced vital capacity-யை அதிகரிக்கிறது, புற்றுநோய்க்குத் தியானமும் யோகாசனங்களும் பிராணாயாமமும் Natural Killer Cells களை எப்படிக் கூடுதலாக உண்டாக்குகின்றன, எந்த அளவுக்குப் பணிபுரிகின்றன என நவீன அறிவியலின் தரவுகளுடன் மிகத் துல்லியமாய் நிறுவப்பட்டுவிட்டது.

யோகாவின் தோற்றம்

உடலை மனதோடு ஒருமித்துப் பார்த்த அந்தப் பண்டைய யோக மரபுக்கு மேலே கூறப்பட்டுள்ள நவீன வார்த்தைகளும் இயங்கியலும் தெரியாது. ஆனால், விளைவு தெரியும். இயற்கையை வழிபட்ட, இயற்கையின் கூறுகளோடு தன்னைப் பொருத்திப் பார்த்து நலவாழ்வைப் புரிந்துகொள்ள முற்பட்ட, நம் மூத்தகுடியின் புரிதல்தான் யோகா. அது ஒரே நாளில் கட்டமைக்கப்பட்டதாகவோ அல்லது ஒரே முனிவரின் கனவில் உதித்ததாகவும் இருக்க முடியாது. இயற்கையின் அசைவுகளைத் தன் நுண்ணறிவால் நோக்கி, தன்னைத் திருத்தி மேம்படுத்திக்கொள்ள நினைத்த நம் நிலத்து மூத்த இனக் குழுக்கள், இயற்கையின் பிரம்மாண்டங்களையும் தன்னில் மூத்த தாவர உயிரினங்களையும் உற்றுப் பார்த்து, பயந்து, பிரமித்து, வணங்கி, பின் அவற்றை ஆராய்ந்து பெற்ற அறிவுப் படிநிலைதான் யோகா.

இது மத அடையாளங்களில் ஒன்றோ அல்லது இன்னொரு வகையான சடங்கோ கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தியாவிலும், ஏன் உலகெங்குமே யோகா அதிகமாய் மத அடையாளத்துடன்தான் பார்க்கப்படுகிறது. இன்றைய யோகாவின் படிநிலைகள் பெரும்பாலும் நவீன யோகக் குருமார்களால் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு, இறை நிலைக்குள் இணைத்துக்கொள்ளும் வழியாகவே மட்டுமே கற்பிக்கப் படுவதுதான் இதற்குக் காரணம்.

முழுமையான யோகா

யோகாவின் சமீபத்திய புதுப் பரிமாணங்கள், ஆதார யோகாவின் அடிப்படை அம்சங்களான இயற்கையை முழுமையாய்ப் புரிந்தும், பிரபஞ்சத்தோடு இந்த மனித உடலைத் தொடர்புபடுத்தி வாழ்வை நலமாய் நகர்த்துவதற்கும், மனதை விட்டு விடுதலையாகி இருப்பதற்கும் தேவையான “முழுமையான” கற்பித்தலை விட்டு விலகி, வெளிநாட்டுக்கான விசா வாங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பது போலக் குறைந்தபட்ச ஆரோக்கியமான உடலுடன் பரம்பொருளுடன் ஐக்கியமாவதற்கான சிறப்புப் பாதையாக மட்டுமே யோகா சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதீத மனஅழுத்தத்துடனும், சமூகப் பிணக்குகளுடனும் சிக்கிச் சிதைந்திருப்போருக்கு இது தெளிவுற்ற பாதையைக் காட்டாமல், பயத்திலோ பரவசத்திலோ இன்னொரு போர்வைக்குள் பொதிந்து கொள்ளும் ஊடகமாகவும் ஆக்கப்பட்டுவருகிறது.

அதன் நீட்சியாய், மறுபடி எதை யோகம் எதிர்த்ததோ, அதே சடங்குகளுக்குள்ளும் சாங்கியத்துக்குள்ளும் அடையாளங்களுக்குள்ளும் செருகிக்கொள்ளும் நிலை உருவாகிறது. பின்னாள் தத்துவ நிறுவனங்களுக்குள் சிக்காத ஆதார யோகாவில் இந்தப் பார்வையும் அடையாளமும் கிடையாது. ஆதார யோகா இறைமறுப்பு/வேதமறுப்புக் கொள்கையாகவும், நம் பழம்மரபின் தாந்திரிகத் தத்துவத்தி லிருந்தும்தான் உருவெடுத்ததாகத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய போன்ற தத்துவ அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.

நாட்பட்ட வாழ்க்கைமுறை நோய்க் கூட்டத்தின் பிடியில் நசுங்கிக்கொண்டிருக்கும் துரித வாழ்வின் பயணிகளான நமக்கு, யோகா எனும் பண்டைய புரிதல் மிகப் பெரிய பயனளிக்கும் மருத்துவக் கூறு. அதைத் தாண்டி, அந்தப் புரிதலில் பொதிந்திருக்கும் மற்றக் கூறுகள் இன்னும் விசாலமானவை. தன்னை உணரும் உடலையும், விட்டு விடுதலையாகும் மனதையும் தருவது. தொடர்ந்து அதை மதக் குறியீட்டுக்குள் செருகுவது என்பது இன்னொரு வணிகக் கண்ணி சித்தாந்தமாக மட்டுமே மாறுவதற்கு வழிவகுக்கும். அதன் தனித்துவமான ஒருமித்த முழுமையான, ஒட்டுமொத்தப் பார்வையில் இருந்து விலக்குவ தாகவும் இது அமைந்துவிடக்கூடும்.

நன்றி : தி இந்து

Post a Comment